முந்தைய திமுக ஆட்சி காலத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு ₹634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. ஐ.எஸ். இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற அவமதிப்பு மற்றும் மறு ஆய்வு மனுக்கள்

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாததை எதிர்த்து இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல், வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசும், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த அனைத்து வழக்குகளும் ஜூன் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு

நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக, நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் தெரிவித்தார்.

இதையடுத்து, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது என்பதை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.