பழனி கோயில் விவகாரத்தில் அமைச்சரை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக வினோத் சூர்யா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், அவர் மீது பொது அமைதியை குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சமூக வலைதள பதிவுகளுக்காக வழக்கமாக குற்றவியல் வழக்குகளை பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. மேலும், பொது அமைதியை குலைத்ததாக வழக்குப்பதிவு செய்ததையும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

பழனி கோயில் நில விவகாரம்

திண்டுக்கல் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு கடந்த 1888 ஆம் ஆண்டு 1.40 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. அந்த தானப் பத்திரத்தில், நிலத்தை லாப நோக்கத்திற்காக விற்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், கோயில் அறக்கட்டளையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் முருகதாஸ் சுவாமிகள், சுமார் ₹30 கோடி மதிப்புள்ள அந்த நிலத்தை இரண்டு தனிநபர்களுக்கு வெறும் ₹2 கோடிக்கு விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், பத்திரப் பதிவு நடைபெற்ற நாளில் பழனி பதிவாளர் விடுப்பில் இருந்த நிலையில், அவருக்குப் பதிலாக ஒரு நாள் பொறுப்பு பதிவாளராக இருந்த கொடைக்கானல் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மூலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டதால், இந்த பரிவர்த்தனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கோயில் அறக்கட்டளை நீதிமன்றத்தை அணுகிய நிலையில், பதிவு துறையின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றம் கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருந்தது.

சமூக வலைதள பதிவு மற்றும் கைது

இதற்கிடையில், அந்த நிலத்தை வாங்கியவர் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ் செல்வன் தொடர்புடையவர் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்த தகவல்கள் தவறானவை என்றும், அவற்றை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் காவல்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வினோத் சூர்யா கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவதூறு குற்றச்சாட்டு இருந்தால் அதற்கான உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்தது ஏன் என்று காவல்துறையிடம் கேள்வி எழுப்பியது.