அமைச்சர் ராஜ்மோகன், “முதல்வர் கர்நாடகம் பயணம் மேற்கொள்வது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வரும். அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா தீவிரம்காட்டி வருகிறது. அதேசமயம், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் இதனை தீவிரமாக எதிர்த்துவருகின்றன. இதற்கிடையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மேகதாது விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகா சென்று அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தன்னிடம் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும், மேகதாதுவை பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் தயாராக இருக்கிறது என கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.
அதேசமயம், மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதலமைச்சரை, தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்து பேசக்கூடாது, இது விவகாரத்தை சிக்கலாக்கிவிடும் எனவும், இந்தச் சந்திப்பு தேவையற்றது. கர்நாடகா முதலமைச்சரைச் சந்திப்பதன் மூலம், இந்தப் பிரச்சனையில் தீர்வு எட்டமுடியாது எனவும் தமிழ்நாட்டின் அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், “முதல்வர் கர்நாடகம் பயணம் மேற்கொள்வது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வரும். அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது; “அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது. தொடக்க கல்வியில் பெற்றோர் வாஞ்சையோடு தங்கள் குழந்தைகளை சேர்த்து இருக்கிறார்கள். அரசுப் பள்ளிகள் எங்கள் கண்கள். அந்த கண்களுக்கு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. சட்டமன்ற கூட்டத் தொடரில் புதிய அறிவிப்புகளுக்கான ஆய்வு நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.



