இந்த நிதி நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டத்தில், `ரூ.35,000 கொடுத்தால், ஒரே ஆண்டில் ரூ.1,21,000 கிடைக்கும்’ என்கிற ஆசை வார்த்தைகளைச் சொல்லி, அப்பாவி மக்களிடமிருந்து பல கோடிகளை அள்ளியிருக்கிறார் இந்த நிறுவனத்தின் இயக்குநர் முத்துராமலிங்கம்.
கடந்த இருபது வருடங்களாகத் திருச்சி சென்ட்ரம் எனும் நிறுவனத்தில் பங்குச் சந்தை சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டுவந்த இவர், தனியார் வங்கியை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் இந்த செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனத்தை உருவாக்கி, அப்பாவி மக்களிடமிருந்து பல நூறு கோடி ரூபாயைக் கொள்ளை அடித்தவர்ஆனால், முத்துராமலிங்கம் சொன்னது போல, அந்த நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு வட்டியும் வரவில்லை செலுத்திய தொகையையும் திருப்பித் தரவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் 2019-ல் புகார் அளித்தனர். அப்போது கிட்டத்தட்ட 50,000-க்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் மோசடி செய்யப்பட்டிருந்ததும், அவர்களிடமிருந்து முத்துராமலிங்கம் ஏமாற்றிய தொகை ரூ. 1,000 கோடி எனவும் தெரியவந்தது. இதனால், இது குறித்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு முத்துராமலிங்கம் மற்றும் அவரின் மனைவி உட்பட 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.இதற்கிடையே ஜாமீனில் வெளிவந்த முத்துராமலிங்கம், திருநெல்வேலியில் புதிய நிறுவனத்தை அமைத்து அதில் மீண்டும் பணத்தை முதலீடு செய்தால், ஏற்கெனவே கட்டிய தொகையையும் சேர்த்து தருவதாக மீண்டும் ஒரு பித்தலாட்டத்தை அரங்கேற்றியுள்ளார். அதையும் நம்பி மக்கள் ரூ.15 கோடி வரை முதலீடு செய்திருக்கிறார்கள்.
இந்தப் பணத்தையும் சுருட்டிக் கொண்டு முத்துராமலிங்கம் ஓடவே, மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக இன்று முத்துராமலிங்கம் வந்திருக்கிறார். வழக்கு விசாரணைக்காக முத்துராமலிங்கம் அங்கு வருவது தெரிந்தவுடன், முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் திரளாக அங்கு வந்து காத்திருந்தனர். முத்துராமலிங்கம் தன் மனைவியுடன் வருவதை மறைவில் இருந்து காத்திருந்தவர்கள் அவர் மீது திடீரென்று பாய்ந்து, அவரைத் தாக்கினார்கள். பலரும் சேர்ந்து அவருக்கு அடியும் உதையும் தந்தனர். தன் மீது மரண அடி விழுவதைக் கண்டு திகைத்துப் போனார் முத்துராமலிங்கம். நீதிமன்ற வளாகத்துக்குள் இந்தத் தாக்குதல் நடந்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.



